தமிழக தலைவர்களுடன் மத்திய மந்திரி அமித்ஷா ஆலோசனை

பா.ஜனதா வேட்பாளர்கள் தேர்வு குறித்து தமிழக தலைவர்களுடன் மத்திய மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா கட்சி சமீபத்தில் 195 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அடுத்தக்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக டெல்லியில் உள்ள பா.ஜனதா தேசிய அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 14 மாநிலங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் மாநிலம் வாரியாக ஆலோசனை நடத்தினர். தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் இரவு 7 மணி அளவில் தொடங்கி 10 மணியை தாண்டியும் நீடித்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 25 தொகுதிகளுக்கு மட்டுமே உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை மாநில தலைமை கொடுத்திருப்பதாகவும், மற்ற இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மத்திய தேர்தல் குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) அல்லது 11-ந் தேதி நடைபெறும் எனவும், அந்த நாட்களிலோ அல்லது அதற்கு அடுத்த நாட்களிலோ 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com