

நகரி,
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பண்டி சஞ்சய் இவர் மத்திய இணை மந்திரியாக உள்ளார். இவரது மகன் பகீரத் (வயது 25). இவர் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து ஐதராபாத் போலீசார் போக்சோ சட்டத்தில் மத்திய மந்திரியின் மகன் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது.
இதற்கிடையே அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதற்கிடையே மத்திய மந்திரி தனது மகனை ஒப்படைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து தனது மகன் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் போலீசில் ஒப்படைக்க இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்தார். இதற்கிடையே பகீரத் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.