உயர் அதிகாரியின் தாயாருக்கு சிகிச்சை அளிக்க.. அரசு டாக்டரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற போலீசார்


உயர் அதிகாரியின் தாயாருக்கு சிகிச்சை அளிக்க.. அரசு டாக்டரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற போலீசார்
x

கோப்புப்படம்

தாயாருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பணியில் இருந்த அரசு டாக்டரை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா நகரில் மாவட்ட அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு சம்பவத்தன்று நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் ராகுல்பாபு மற்றும் மருந்தாளுனர் ஷரத் யாதவ் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சில ஏட்டுகள் அங்கு வந்தனர். அவர்கள் உயர் அதிகாரியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் வந்து சிகிச்சை அளிக்கும்படியும் கூறி, டாக்டரை அழைத்தனர்.

பல நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்ததால் அங்கிருந்து வர முடியாது என்று டாக்டர் மறுப்பு தெரிவித்தார். வேறு ஒருவரை அனுப்பி வைப்பதாக கூறி உள்ளார். ஆனால் இதை ஏற்க மறுத்த போலீசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று உயர் அதிகாரியின் தாயாருக்கு சிகிச்சை அளிக்க வைத்து உள்ளனர். அப்போது டாக்டரின் செல்போனையும் பறித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்கள், மருந்தாளுனர் சங்கத்தினர், மறுநாள் புறநோயாளிகள் பிரிவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவமனைக்கு விரைந்து விசாரணையில் ஈடுபட்டார்.

அப்போது மூத்த போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேஸ் குமார் ஸ்ரீவஸ்தவாவின் தாயாருக்கு கடந்த புதன்கிழமை இரவில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதனால் போலீசார், அரசு டாக்டரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவருக்கு சிகிச்சை அளித்ததுதம் தெரியவந்தது. இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மருத்துவ அதிகாரி, “காவல்துறையின் செயலை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் இதுகுறித்த போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேஷ் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். “நான் ஒரு டாக்டரை, அதுவும் தனியார் டாக்டரைத்தான் அழைத்து வரச் சொன்னேன். அரசு டாக்டரை அழைத்துவர கூறவில்லை. போலீசாரின் நடவடிக்கைகள் தனக்கு அதிருப்தி அளிக்கிறது” என்று கூறினார். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த அரசு டாக்டரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாக அனிருத் சாஹு மற்றும் ஹிதேஷ் வர்மா என்ற 2 போலீஸ் ஏட்டுகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

1 More update

Next Story