10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
Published on

புதுடெல்லி,

பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு (உயர் சாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்தார். சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

4 மணி நேர விவாதத்துக்கு பிறகு, இரவு 10 மணியளவில், இடஒதுக்கீட்டு மசோதா மீது ஓட்டெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 323 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர். யாரும் ஓட்டெடுப்பை புறக்கணிக்கவில்லை.எனவே, மசோதா அமோக ஆதரவுடன் நிறைவேறியது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தம்பிதுரை உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதா நிறைவேறியதாக அறிவித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபைக்கு வந்திருந்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கு குறையாத ஆதரவுடன் மசோதா நிறைவேறி இருப்பதாக கூறினார்.

மாநிலங்களவையில் தாக்கல்

இந்த நிலையில், 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில், சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தாக்கல் செய்தார். இதற்கிடையே, மாநிலங்களவை அமர்வு முன் அறிவிப்பு இன்றி நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com