எல்.பிஜி இறக்குமதி 67 சதவீதம் அமெரிக்காவில் இருந்தே நடைபெறுகிறது: மத்திய மந்திரி தகவல்

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது.
எல்.பிஜி இறக்குமதி 67 சதவீதம் அமெரிக்காவில் இருந்தே நடைபெறுகிறது:  மத்திய மந்திரி தகவல்
Published on

இந்தியாவின் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) இறக்குமதியில் தற்போது 67 சதவீதம் அமெரிக்காவில் இருந்தே பெறப்படுவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் மொத்த எல்.பி.ஜி. தேவையில் சுமார் 10 சதவீதத்தை மட்டுமே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது இந்த முடிவுக்கு ஹார்முஸ் ஜலசந்தி நிலைமையோ அல்லது புவிசார் அரசியல் பதற்றமோ காரணம் அல்ல.

பெரிய மாற்றம்

அமெரிக்காவில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்வது அவசியமா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், இந்தியாவுக்கு அருகிலேயே எரிவாயு வழங்கும் நாடுகள் உள்ளன. ஆனால், கடந்த சில மாதங்களில் உலகளாவிய சூழ்நிலைகள் வேகமாக மாறியதால், இந்தியாவின் இறக்குமதி திட்டத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எரிசக்தி பாதுகாப்பு

தற்போது இந்தியா இறக்குமதி செய்யும் எல்.பி.ஜி.யில் சுமார் 67 சதவீதம் அமெரிக்காவில் இருந்தே வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து எரிசக்தியை கொள்முதல் செய்வதன் மூலம், உலகளாவிய நெருக்கடிகளின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது என்றும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com