

ஆக்ரா,
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, தனது மனைவி ஜினெட் ரூபியோவுடன் இன்று காலை உலகப் புகழ்பெற்ற முகலாய கால நினைவுச் சின்னமான தாஜ்மஹாலை பார்வையிட்டார். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தாஜ்மஹாலை ரசித்த அவர், இதனை "உலகின் காதல் பொக்கிஷங்களில் ஒன்று" என்று வர்ணித்துள்ளார்.
இந்தியாவுக்கு நான்கு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள மார்கோ ரூபியோ, இன்று காலை 10 மணி அளவில் தனி விமானம் மூலம் ஆக்ராவில் உள்ள கெரியா விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் கார் மூலம் தாஜ்மகாலின் கிழக்கு வாசல் அருகே உள்ள ஹோட்டலுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து கோல்ஃப் கார்ட் (Golf Cart) மூலம் தாஜ்மகால் வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
தாஜ்மஹாலை பார்வையிட்ட பிறகு அங்கிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில், "உலகின் மிகச்சிறந்த காதல் பொக்கிஷங்களில் ஒன்றை நாங்கள் பார்வையிட அனுமதித்ததற்கு நன்றி" என்று மார்கோ ரூபியோ உணர்வு பூர்வமாக எழுதியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி, இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரும் உடன் வந்திருந்தார். அவர்கள் அனைவரும் இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் அங்கு செலவிட்டனர்.
விஐபி வருகையையொட்டி தாஜ்மகால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக, தாஜ்மகால் வளாகத்திற்குள் ஏற்கனவே இருந்த சுற்றுலாப் பயணிகள் தற்காலிகமாக வெளியேறுமாறு பாதுகாப்புப் படையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆக்ரா பயணத்தை முடித்துக்கொண்டு ரூபியோ அடுத்து ஜெய்ப்பூர் செல்லவுள்ளார். அதன் பின்னர், நாளை காலை புதுடெல்லிக்குத் திரும்பும் அவர், அங்கு நடைபெறவுள்ள 'குவாட்' (Quad) நாட்டு வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, உத்தரபிரதேசத்தில் கடுமையான கோடை வெயில் நிலவி வரும் சூழலில் இந்த பயணம் அமைந்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆக்ராவில் அதிகபட்சமாக 45.4 டிகிரி செல்சிஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 32.8 டிகிரி செல்சிஸ் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.