

புதுடெல்லி,
பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்த நிலையில், 2016-ம் ஆண்டு இந்திய ராணுவம் எல்லை தாண்டிச்சென்று துல்லியமான தாக்குதல்கள் நடத்தியது. இந்த துல்லிய தாக்குதல்களை பிரதமர் மோடி அரசியல் ஆக்குவதாக காங்கிரஸ் புகார் கூறுகிறது.
இந்த நிலையில், சண்டிகார் நகரில் நேற்று முன்தினம் ராணுவ இலக்கிய விழா நடந்தது. இதில், துல்லிய தாக்குதல் பற்றிய விவாதம் நடந்தது. அப்போது, துல்லிய தாக்குதல் நடந்தபோது வடக்கு பிராந்திர தளபதியாக பணியாற்றிய டி.எஸ்.ஹூடா கருத்து தெரிவிக்கையில், துல்லிய தாக்குதல்கள் பெரிதுபடுத்தப்பட்டு விட்டன. இப்படி பெரிதுபடுத்துவது பலன் தருமா என்றால் முற்றிலும் இல்லை என்பதுதான் எனது பதில். ராணுவ செயல்பாடுகளில் அரசியல் அதிர்வுகள் ஏற்படுத்த தொடங்கினால் அது நல்லதல்ல. இது சரியா, தவறா என்பது பற்றி அரசியல்வாதிகளிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறினார்.
இது தொடர்பாக டுவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ஹூடா உண்மையான ராணுவ ஜெனரலாக பேசி இருக்கிறார். இந்தியா உங்களால் பெருமைப்படுகிறது. ஆனால் நமது ராணுவத்தை தனிப்பட்ட சொத்தாக பயன்படுத்துவதில் திருவாளர் 36-க்கு (பிரதமர் மோடி) வெட்கம் இல்லை. அவர் துல்லியமான தாக்குதல்களை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகிறார். அம்பானியின் மூலதனத்தை ரூ.30 ஆயிரம் கோடி உயர்த்துவதற்கு ரபேல் பேரத்தை பயன்படுத்துகிறார் என கூறி உள்ளார்.