சம்பளத்தின் ஒரு பகுதியை எம்.பி.க்கள் வழங்க வேண்டும் - வருண் காந்தி கோரிக்கை

ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சம்பளத்தின் ஒரு பகுதியை எம்.பி.க்கள் வழங்க வேண்டும் என்று வருண் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. முன்னதாக சென்னை நோக்கி வந்த ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. இது அருகில் உள்ள தண்டவாளத்தில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் கோரமண்டல் எக்ஸ்பிரசின் பின்பக்க வண்டி மூன்றாவது பாதையில் தடம் புரண்டது. பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மூன்றாவது பாதையில் எதிர் திசையில் இருந்து, தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சம்பளத்தின் ஒரு பகுதியை எம்.பி.க்கள் வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி கேரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஒடிசா ரெயில் விபத்து, இதயத்தைப் பிளக்கும் சம்பவம். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் மக்கள் பாறை போல உறுதியாக நிற்க வேண்டும். ரெயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதலில் ஆதரவும், அடுத்து நீதியும் வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சம்பளத்தின் ஒருபகுதியை வழங்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்' என்று வருண் காந்தி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com