

புதுடெல்லி,
வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், 5 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இன்று தொடங்கி 7-ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், இந்தியா-வெனிசுலா இடையேயான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறை சார்ந்த விஷயங்கள் குறித்து மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
முன்னதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்று கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதற்கு ரஷியா, ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இது குறித்து இந்திய அரசும் கவலை தெரிவித்தது. நிலைமையை கவனித்து வருவதுடன், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்தது. இந்த சூழலில், டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பதவியேற்றார். அவர் அமெரிக்காவுடன் சுமுக அணுகுமுறையை கையாண்டு வருகிறார்.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சில தளர்வுகளை ஏற்படுத்திய பின்னர், வெனிசுலாவிடம் இருந்தும் இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த மே மாதத்தில் வெனிசுலாவிடம் இருந்து அதிகம் எண்ணெய் இறக்குமதி செய்த 2-வது நாடாக இந்தியா உள்ளது. உலகிலேயே அதிக அளவு கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுலா உள்ள நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக வெனிசுலா இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த டெல்சிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்டுள்ள முதல் இந்திய பயணம் இதுவாகும்.
தொடர்ந்து டெல்சி ரோட்ரிக்ஸ் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது எரிசக்தி, வர்த்தகம், முதலீடு ஆகியவை குறித்து இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டுமின்றி இரு நாடுகள் இடையேயான வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டை பொறுத்தவரை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 678.94 94 மில்லியன் டாலராக இருந்தது. இதனை மேலும் புதிய முதலீடுகள் மூலமாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும் வெனிசுலா நாட்டில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான எண்ணெய் வயலில் இந்தியாவின் எண்ணெய் நிறுவனம் சுமார் 538 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறது. ஆனால் அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படாமல் இருப்பதால் இந்தியாவின் பணம் சுமார் 8300 கோடி ரூபாய் அதில் சிக்கி இருக்கிறது. அதனை மீட்பது தொடர்பாகவும் இந்த ஆலோசனையில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.