வெனிசுலா இடைக்கால அதிபர் 5 நாட்கள் பயணமாக இந்தியா வருகை

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து டெல்சி ரோட்ரிக்ஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
வெனிசுலா இடைக்கால அதிபர் 5 நாட்கள் பயணமாக இந்தியா வருகை
Published on

புதுடெல்லி,

வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், 5 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இன்று தொடங்கி 7-ந்தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், இந்தியா-வெனிசுலா இடையேயான எரிசக்தி, வர்த்தகம், முதலீடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறை சார்ந்த விஷயங்கள் குறித்து மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

முன்னதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்று கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். தொடர்ந்து நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதற்கு ரஷியா, ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இது குறித்து இந்திய அரசும் கவலை தெரிவித்தது. நிலைமையை கவனித்து வருவதுடன், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்தது. இந்த சூழலில், டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பதவியேற்றார். அவர் அமெரிக்காவுடன் சுமுக அணுகுமுறையை கையாண்டு வருகிறார்.

கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சில தளர்வுகளை ஏற்படுத்திய பின்னர், வெனிசுலாவிடம் இருந்தும் இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த மே மாதத்தில் வெனிசுலாவிடம் இருந்து அதிகம் எண்ணெய் இறக்குமதி செய்த 2-வது நாடாக இந்தியா உள்ளது.

இந்நிலையில் இன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த டெல்சிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து டெல்சி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் மும்பையில், இந்திய எரிசக்தி தொழில் துறை தலைவர்களையும், செயலதிகாரிகளையும் டெல்சி சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com