பீகாரில் துக்கம் விசாரிக்க சென்ற மந்திரி மீது கிராம மக்கள் தாக்குதல்

காரில் ஏறிச் சென்ற மந்திரியை சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை கிராம மக்கள் துரத்திச் சென்றனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜோகிபூர் மலாவன் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து இன்று காலை பீகார் மாநில கிராமப்புற மேம்பாட்டு மந்திரி ஷ்ரவன் குமார், உள்ளூர் எம்.எல்.ஏ.வுடன் சேர்ந்து சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்க ஜோகிபூர் மலாவன் கிராமத்துக்குச் சென்றார்.
அப்போது கிராம மக்களில் சிலர் திடீரென மந்திரியையும், எம்.எல்.ஏ.வையும் தாக்கத் தொடங்கினர். அவர்களை பாதுகாவலர்கள் தடுக்க முயன்றனர். இதற்கிடையில், மந்திரியும், எம்.எல்.ஏ.வும் காரில் ஏறிச் சென்றனர். இருப்பினும் சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை கிராம மக்கள் அவர்களை துரத்திச் சென்றனர். இந்த சம்பவத்தில் மந்திரியும், எம்.எல்.ஏ.வும் பெரிய காயங்கள் இல்லாமல் தப்பினர். அதே சமயம் மந்திரியின் ஆதரவாளர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. துக்கம் விசாரிக்க சென்ற மந்திரியை கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






