

மும்பை,
மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழையால் சாலைகள், குடியிருப்புகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.
அந்த வகையில் மராட்டிய மாநிலத்தின் பால்கர் மாவட்டத்திலும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் மார்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், அங்குள்ள அனுமன்பாதா கிராமத்தில் வசித்து வரும் பிரியங்கா ரவி யாதவ் என்ற பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர்களது குடியிருப்பு பகுதியை சுற்றி வெள்ளம் சூழ்ந்திருந்ததால் அங்கு ஆம்புலன்ஸ் வாகனம் எதுவும் வர முடியவில்லை.
கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த நிலையில், கிராம மக்கள் அந்த குடும்பத்திற்கு உதவ முன்வந்தனர். அவர்கள் வீட்டின் கதவு ஒன்றை கழற்றி எடுத்து, அதனை ஸ்டிரெச்சர் போல் பயன்படுத்தி கர்ப்பிணி பெண்ணை அதில் படுக்க வைத்தனர். பின்னர், மார்பளவு சூழ்ந்த வெள்ள நீரில் அந்த பெண்ணை தூக்கிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
கிராம மக்களின் இந்த சமயோசித செயலால், கர்ப்பிணி பெண்ணுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்தது. மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் நிலை குலைந்து நிற்கும் சூழலில், கர்ப்பிணி பெண் ஒருவர் கிராம மக்களின் கூட்டு முயற்சியால் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.