உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது வன்முறை: போலீசார் துப்பாக்கி சூடு-ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் பல்வேறு இடங்களில் மோதல்கள் ஏற்பட்டதால், வேட்புமனு தாக்கல் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது வன்முறை: போலீசார் துப்பாக்கி சூடு-ஆந்திராவில் பரபரப்பு
Published on: 

அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 2-வது நாளாக இன்று நடைபெற்றுவருகிறது. வேட்பு மனு தாக்கலில் போது பல்வேறு இடங்களில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரிடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. உச்ச கட்டமாக புலிவெந்துலாவில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

ஆந்திராவில் புங்கனூர், ராயச்சோட்டி, ராஜம்பேட்டை, திருப்பதி, கடப்பா, குரஜாலா, பல்நாடு மாவட்டத்தில் உள்ள பிடுகுரல்லா மற்றும் பிரகாசம் மாவட்டத்தின் தர்சி உள்ளிட்ட பகுதிகளில் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள், அந்தக் கட்சியின் எம்.பி. ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி தலைமையில் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் மையத்துக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது.

வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் கற்களை வீசியதால் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். மேலும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் கூட்டத்தைக் கலைத்துள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கடப்பாவில் கத்திக்குத்து

கடப்பா நகரில் மரியாபுரம், காந்தி நகர் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வேட்புமனு தாக்கல் மையங்களுக்கு அருகே இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், சிலர் கத்தியால் தாக்கப்பட்டனர். இதில் முன்னாள் மேயர் மும்தாஜ் பேகத்தின் மகன் முபாரக் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கியுடன் வந்த 4 பேர் கைது

ராயச்சோட்டியில் மதனப்பள்ளி சாலையில் துப்பாக்கிகளுடன் வந்ததாகக் கூறப்படும் சிலர், தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்களைத் தாக்கியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைத்தனர். மேலும், பஞ்சாபைச் சேர்ந்த 4 பேரை கைது செய்து, 2 துப்பாக்கிகள் மற்றும் சுமார் 30 தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர். திருப்பதியில் மேயர் வேட்பாளர் வாசு யாதவுக்குச் சொந்தமான வேட்புமனு ஆவணங்களை தெலுங்கு தேசம் கட்சியினர் பறித்ததாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். ஆந்திராவில் பல்வேறு இடங்களில் மோதல்கள் ஏற்பட்டதால், வேட்புமனு தாக்கல் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com