குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை: மனித உரிமை ஆணையத்தில் ராகுல் காந்தி புகார் - பிரியங்காவும் உடன் சென்றார்

குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக, மனித உரிமை ஆணையத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் புகார் தெரிவித்தனர்.
குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தில் வன்முறை: மனித உரிமை ஆணையத்தில் ராகுல் காந்தி புகார் - பிரியங்காவும் உடன் சென்றார்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த மாதம் நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பலர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த இந்த உயிரிழப்புகளுக்கு போலீசாரே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் கட்சித்தலைவர்கள் நேற்று டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் இந்த வன்முறைகள் தொடர்பாக புகார் அளித்தனர்.

குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய அட்டூழியங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்கள், இந்த போராட்டங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

ராகுல், பிரியங்காவுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா, ஜிதின் பிரசாதா, மொசினா கித்வாய் உள்பட பலர் சென்றிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com