

புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டங்களில் வன்முறை மூண்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர்.
எனவே டெல்லியில் தங்கியிருக்கும் அல்லது டெல்லி செல்லும் அமெரிக்கர்கள் கவனமாக இருக்குமாறு அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள பயண அறிவிப்பில், டெல்லியில் இருக்கும் அமெரிக்கர்கள் அங்கு நடைபெறும் போராட்டங்கள், சாலை மற்றும் மெட்ரோ ரெயில் நிலைய மூடல்கள் குறித்து உள்ளூர் ஊடகங்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் போக்குவரத்து நெரிசல், போராட்டங்கள் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அமெரிக்க அரசு, தங்களை சுற்றி நடப்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும் எனவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் குறிப்பிட்டு உள்ளது.