

புதுடெல்லி,
மேற்கு ஆசிய நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க எரிபொருள்களை சிக்கனமாக பயன்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். குடிமக்கள் பொது வாகனங்களை பயன்படுத்தவும், கல்விநிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை ஊக்கப்படுத்தவும், நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலையை அனுமதிக்கவும் அறிவுறுத்தினார்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று டெல்லி அரசு பொதுபோக்குவரத்தை அதிகம் பயன்படுத்த மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அரசு தரப்பிலும் 60 சதவீதம் அளவுக்கு அதிகாரிகளின் வாகன பயன்பாட்டை குறைத்து உள்ளதாக கூறியிருப்பதுடன், அதிகாரிகள் மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பொது சேவைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து குஜராத்திலும் இதேபோன்ற எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளுக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்ற சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க சுப்ரீம் கோர்ட்டும் முன் வந்துள்ளது. “எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதை உறுதி செய்வதற்காக, வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க முடிவு செய்து இருப்பதாக" சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்து உள்ளது.
"மறு உத்தரவு வரும் வரை, பதிவகத்தின் ஒவ்வொரு கிளை அல்லது பிரிவிலும் உள்ள பணியாளர்களில் 50 சதவீதம் பேர் வரை, வாரத்திற்கு இரண்டு நாட்கள் வரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.