

காந்திநகர்,
ஹர்திக் படேலில் உதவியாளர் நரேந்திர படேல், தன்னை பாரதீய ஜனதாவில் இணைய வருமாறும் அதற்காக ரூ.1 கோடி தருவதாக அக்கட்சியினர் ஆசை வார்த்தை கூறியதாக குற்றம் சாட்டிய நிலையில், பாரதீய ஜனதாவை விமர்சித்துள்ள ராகுல் காந்தி, குஜராத் இளைஞர்களின் குரலை ஒடுக்கவோ அல்லது வாங்கவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள காந்திநகரில் நவ்சர்ஜன் ஜனதேஷ் மகாசம்மேளன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:- குஜராத்தில் அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். குஜராத் அரசாங்கம் மக்களுக்காக நடத்தப்படவில்லை. 5 முதல் 10 தொழில் அதிபர்களுக்காக நடத்தப்படுகிறது. குஜராத் இளைஞர்களின் குரலை ஒடுக்கவே விலைக்கு வாங்கவோ முடியாது.
குஜரத்தில் 30 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க குஜராத் அரசோ மத்திய அரசோ சிறிய முயற்சியை கூட செய்யவில்லை. ஒட்டுமொத்த இந்திய பொருளாதரத்தையும் மோடி முடக்கிவிட்டார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும், நான் முன்னாள் அமைச்சர் பசிதம்பரத்தை அழைத்து பேசினேன். அவர்கள்(மத்திய அரசு) ஏன் செய்தார்கள் என்று அவரால் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. மக்களின் குரலுக்கு ஆதரவாக காங்கிரஸ் நிற்கும் இவ்வாறு அவர் கூறினார்.