

பெங்களூரு,
பெங்களூரு புறநகர் பகுதியில், ஆபத்தான மாஞ்சா நூலில் சிக்கி உயர் அழுத்த மின்கம்பியில் 4 நாட்களாக தலைகீழாக தொங்கி உயிருக்கு போராடிய கழுகை, வனத்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் இணைந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா சாலையில் வீவர்ஸ் காலனி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில், பட்டம் விடுவதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான மாஞ்சா நூல் சுற்றியிருந்தது.
இந்த நிலையில், அந்த வழியாக பறந்து வந்த கழுகு ஒன்று, எதிர்பாராதவிதமாக அந்த மாஞ்சா நூலில் சிக்கிக்கொண்டது. நூல் இறுக்கமாக சுற்றிக்கொண்டதால், கழுகால் அங்கிருந்து பறக்க முடியவில்லை. இதனால், உயர் அழுத்த மின்கம்பியிலேயே தலைகீழாக தொங்கியபடி, 4 நாட்களாக உணவும் தண்ணீரும் இன்றி உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள், பன்னரகட்டா வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயர் அழுத்த மின்கம்பி என்பதால், பெஸ்காம் மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, வனத்துறையினரும் மின்வாரிய ஊழியர்களும் இணைந்து, மின்கம்பியில் சிக்கியிருந்த மாஞ்சா நூலை துண்டித்து கழுகை பத்திரமாக மீட்டனர். 4 நாட்களாக உணவின்றி இருந்ததால் மிகவும் சோர்வடைந்து காணப்பட்ட அந்த கழுகுக்கு, வனத்துறை கால்நடை டாக்டர்கள் மூலம் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கழுகு முழுமையாக குணமடைந்த பிறகு, மீண்டும் அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.