

புதுடெல்லி,
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் ராணுவ கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. ஆனால், குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது.
இதற்கிடையே, குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி சந்திக்க பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் கடந்த 10-ம் தேதி அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் சிறையில் வாடி வரும் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை பார்க்க வரும் அவரது மனைவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியதாவது: குல்பூஷன் ஜாதவை பார்க்க அவரது மனைவிக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் சந்திக்க செல்கின்றனர். எனவே, இரு நாடுகளுக்கு உள்ள இறையாண்மையை மதித்து பாகிஸ்தான் வரும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
இரு பெண்களும் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் கால காட்டத்தில் எந்த வித விசாரணைக்கோ, துன்புறுத்தலுக்கோ உள்ளாக்க கூடாது. ஜாதவின் மனைவி மற்றும் தாயாருடன் இந்திய தூணை தூதர் எப்போதும் உடன் இருக்கவும் பாகிஸ்தான் அனுமதி அளிக்கவேண்டும் இவ்வாறு தெரிவித்தார்.