'நீட் விவகாரத்தில் நாங்கள் அமைதியாக இல்லை; நடவடிக்கை எடுத்து வருகிறோம்' - பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத்

நீட் விவகாரத்தில் அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
NEET issue BJP MP Ravi Shankar Prasad
Published on

புதுடெல்லி,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானது.

இதனிடையே, நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வு மையத்தில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே வழங்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் 2 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து கடந்த மாதம் 28-ந்தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியைச் சேர்ந்த பள்ளியின் முதல்வர் இசானுல் ஹக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகிய இருவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில், நீட் விவகாரத்தில் அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என பா.ஜ.க. எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் அமைதியாக இல்லை. நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி பேச மட்டுமே செய்யும், ஆனால் நாங்கள் செயல்படுவோம். 50 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக இன்னும் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை" என்று தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com