ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அரசிற்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளன என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு
Published on

புதுடெல்லி,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், உள் துறை மந்திரி அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சந்தீப் பந்தோபாத்யாய, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, சமாஜ்வாதி கட்சி எம்.பி., ராம் கோபால் யாதவ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், சிவ சேனா(யுபிடி) எம்பி சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ்(எஸ்பி) எம்பி சுப்ரியா சுலே, பிஜு ஜனதா தள எம்பி சஸ்மித் பத்ரா, சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், ஐக்கிய ஜனதா தள எம்பி சஞ்சய் ஜா, ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதின் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில், டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நாடு ஒரு முக்கியமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் போது அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியைக் காட்டினர். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்க உறுதிபூண்டுள்ளன. எம்.பி.க்களிடமிருந்து சில ஆலோசனைகள் வந்தன. பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்கிறது. என்ன நடக்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க இயலாது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com