243 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: சித்தராமையா பெருமிதம்

எங்களுடைய அரசு கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது, 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என சித்தராமையா கூறினார்.
கலபுரகி,
கர்நாடகாவின் கலபுரகி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக பொய் பேசுகின்றன. உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான நிதி அரசிடம் இல்லை என்று அவர்கள் எல்லா இடங்களிலும் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். ஜெவர்கி என்ற ஒரு தொகுதிக்கு ரூ.906 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் கூறுவது போன்று அப்படி அரசு திவாலாகி இருந்தால், இதற்கு சாத்தியமில்லை. இதுவரை ரூ.1.12 லட்சம் கோடிக்கும் கூடுதலாக செலவு செய்யப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளின்படி, ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு உள்ளன என்று கூறினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலேயே அரசு செயல்படுகிறது. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில், 592 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியது. 243 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மீதமிருக்கிற வாக்குறுதிகளும் வருகிற நாட்களில் நிறைவேற்றப்படும் என்றார்.
அவர் தொடர்ந்து, கடந்த முறை எங்கள் அரசு ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் அளித்த 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என்றும் கூறினார்.






