

திருச்சி,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
பிரசாரம் பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
இதில், 117 தொகுதிகளுக்கு ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் களமிறங்கியுள்ளார்.
இந்த மாநாட்டில் சீமான் பேசியதாவது;-
5வது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும், நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து தேர்தல் களத்திலே நிற்கிறது என்றால் அது இந்திய துணைக்கண்டத்திலேயே நாம் தமிழர் கட்சி மட்டும்தான்.
தனித்துவத்தோடு இருக்கிறோம்... தனித்த உயர்ந்த தத்துவத்தோடு இருக்கிறோம். மொழி அழிந்தால் நாடு அழியும். அரசியல் விடுதலைதான் தேவையே தவிர வியாபாரம் தேவையில்லை.
இது ரசிகர் கூட்டம் அல்ல, லட்சியக்கூட்டம். திரைக்கவர்ச்சியா? இன எழுச்சியா...? பணத்திற்காக நான் தேர்தலில் நிற்கவில்லை. தமிழ் இனத்திற்காக தேர்தலில் நிற்கிரோம். களமிறங்கிய தேர்தல்களில் எல்லாம் தோல்வியடைந்தோம். அடிபட்ட புலியும், அடிமைப்பட்ட இனமும் எழுந்து நிற்கிறோம்.
ரூ. 5 ஆயிரம் வாங்குகிற என் அம்மாக்கள் கைகளில் ரூ. 2 லட்சம் கடன் இருக்கிறது என்பதை அறிவுச்சமூகம் அறிய வேண்டும். இதை சிந்திக்க தொடங்கிவிட்டால் மாற்றத்திற்கான அரசியல் தொடங்கிவிட்டது.
என்றார்.