ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு ஒத்திகை நிகழ்ச்சி: வங்காள தேச பிரதமர் இந்தியா வருகை?

வங்காளதேசத்தில் பதவி நீக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று டாக்கா கோரிக்கை வைத்தது.

ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு ஒத்திகை நிகழ்ச்சி
வங்காள தேச பிரதமர்
Published on

புதுடெல்லி,

வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவுக்கு வர உள்ள நிலையில், அவரை வரவேற்பதற்கான முழு ஒத்திகை நடைபெற உள்ளதாக ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தியா பயணம்

வங்காள தேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் வரவிருக்கும் இந்தியப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என ஜனாதிபதி மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு அளிக்கப்படும் பாரம்பரிய வரவேற்புக்கான முழு ஒத்திகைகளுக்கு இடமளிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகையில் வழக்கமாக நடக்கும் வாராந்திர காவலர் மாற்று அணிவகுப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையே பதற்றம்

வங்காளதேசத்தில் பதவி நீக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று டாக்கா கோரிக்கை வைத்தது. இதன் தொடர்பாக இரு அண்டை நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சூழலில் ஜூலை 24 -ம் தேதி பிரதமர் மோடி, செப்டம்பர் 12-13 ஆம் தேதிகளில் நடக்க இருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு வங்காள தேச பிரதமரை சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்தார்.

இந்த பதட்டங்களைத் தொடர்ந்து, முன்னதாக கடந்த 18-ம் தேதிஅன்று, டாக்காவில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதி கலந்துக் கொண்டு இருதரப்பு பதற்றத்தைத் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி ரஹ்மானின் பயணத்தை "நினைவில் நிற்கும் ஒன்றாக" மாற்ற விரும்புவதாகக் கூறினார் என்றும் பிரதமர் மோடி ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டார் “நாம் சந்திக்க வேண்டும்”, என்று திரிவேதி கூறியிருந்தார்.

கண்ணியமான அழைப்பு

வங்காள தேசத்தில் நேற்று அரசு நடத்தும் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வங்காள தேச வெளியுறவுத்துறை ஆலோசகர் ஹுமாயூன் கோபிர், "பரஸ்பர நம்பிக்கையின்" அடிப்படையிலான சூழலும், புது டெல்லியிலிருந்து "கண்ணியமான அழைப்பும்" கிடைக்காத வரையில், ரஹ்மானின் உச்சிமாநாட்டுப் பயணத்திற்கான வாய்ப்பு "மிகக் குறைவாகவே உள்ளது" என்று கூறியுள்ளார்.

இதனால், தாரிக் ரஹ்மானின் இந்திய வருகை குறித்து தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜனாதிபதி மாளிகையின் இந்த ஒத்திகை அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com