ஆமதாபாத் நகரில் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு - மோடியுடன் சென்று சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்

இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்வதற்காக நேற்று ஆமதாபாத் வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அவரை கட்டித்தழுவி வரவேற்றார். பின்னர் டிரம்ப், மோடி யுடன் சென்று சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்.
ஆமதாபாத் நகரில் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு - மோடியுடன் சென்று சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்
Published on

ஆமதாபாத்,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக விளங்கும் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது.

இந்த உறவை மேம் படுத்தும் வகையில், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, 2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று இந்தியா வந்தார். அமெரிக்க ஜனாதிபதியான பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.

டிரம்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் வந்தனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் வந்து விட்டு, அதன் பிறகு ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்த்துவிட்டு, பின்னர் டெல்லி செல்லும் வகையில் டிரம்பின் பயண திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.

எனவே டிரம்பை வரவேற்பதற்காக ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. டிரம்பை வரவேற்கும் வகையில் பல இடங்களில், மோடியுடன் அவர் இருக்கும் பேனர்களும், கட்-அவுட்களும் வைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் சீரமைக்கப்பட்டு இருபுறமும் இந்திய-அமெரிக்க கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தன.

நேற்று முன்தினம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட டிரம்ப் நேற்று காலை ஆமதாபாத் வந்தார். அவர் பயணம் செய்த பாதுகாப்பு மிகுந்த ஏர்போர்ஸ் ஒன் விமானம் காலை 11.37 மணிக்கு ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. 11.40 மணிக்கு விமானம் தரை இறங்குவதாக இருந்தது. ஆனால் 3 நிமிடம் முன்னதாகவே விமானம் ஆமதாபாத் வந்து சேர்ந்து விட்டது.

டிரம்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி ஒரு மணி நேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வந்து காத்து இருந்தார். விமானநிலையத்தில் டிரம்புக்கு, ஆடல்-பாடல் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிரம்ப் விமானத்தில் இருந்து இறங்கி வந்தபோது அவரை வரவேற்கும் வகையில் சங்கொலி முழங்கப்பட்டது. பெண்கள் பாரம்பரிய நடனம் ஆடி டிரம்பை வரவேற்றனர்.

விமானத்தில் இருந்து இறங்கிய டிரம்பை பிரதமர் மோடி கட்டித்தழுவி வரவேற்றார். மெலனியாவை கைகுலுக்கி வரவேற்றார். உயர் அதிகாரிகளும் டிரம்பை கைகுலுக்கி வரவேற்றனர். டிரம்ப் கறுப்பு நிற கோட்-சூட் மற்றும் மஞ்சள் நிற டை அணிந்து இருந்தார். அவரது மனைவி வெள்ளை நிற ஜம்சூட் அணிந்து இருந்தார்.

மேளதாளத்துடன் அளிக்கப்பட்ட பாரம்பரிய வரவேற்பை டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் அமெரிக்க குழுவினர் மிகவும் ரசித்து பார்த்தபடியே நடந்து சென்றனர். வண்ண உடையணிந்த பெண்கள் தலையில் கலசங்களை வைத்தபடி நடனமாடியது அமெரிக்க குழுவினரை வெகுவாக கவர்ந்தது.

விமானநிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், டிரம்ப் அங்கிருந்து மனைவி மெலனியாவுடன் தனது பீஸ்ட் காரில் ஏரி, சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு புறப்பட்டார். இதேபோல் பிரதமர் மோடியும் அங்கிருந்து தனது காரில் ஆசிரமத்துக்கு கிளம்பினார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது 1917-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை இந்த ஆசிரமத்தில்தான் மகாத்மா காந்தி தனது மனைவியுடன் வசித்தார்.

டிரம்பின் காருக்கு பக்கவாட்டில் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. உயர் அதிகாரிகள் தனி வாகனங்களில் சென்றனர்.

விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் அமைந்துள்ள 22 கிலோ மீட்டர் தொலைவிலும் சாலையின் இருபுறமும் லட்சக்கணக் கான மக்கள் திரண்டு நின்று இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் தேசிய கொடிகளையும் அசைத்தபடி டிரம்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வழியில் 30 இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு இந்தியாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சபர்மதி ஆசிரமம் போய்ச் சேர்ந்த டிரம்ப்பை, பிரதமர் மோடியும் ஆசிரம நிர்வாகி கார்த்திகேய சரபாயும் வரவேற்றனர். அப்போது டிரம்புக்கு மோடி சால்வை அணிவித்தார். அவரது மனைவி மெலனியாவுக்கும் சால்வை வழங்கினார். பின்னர் டிரம்பும், மெலனியாவும் தங்கள் காலணிகளை கழற்றி விட்டு ஆசிரமத்துக்குள் சென்றனர்.

முதலில் டிரம்பும், மோடியும் ஆசிரம வராண்டாவில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு நூல் மாலை அணிவித்தனர். அதன்பிறகு மோடி, டிரம்பையும், மெலனியாவையும் ஆசிரமத்துக்குள் அழைத்துச்சென்றார். சபர்மதி ஆசிரமம் பற்றியும், அதன் பெருமைகள் பற்றியும் அவர்களிடம் மோடி விளக்கி கூறினார்.

அதன்பிறகு அவர்கள் மீண்டும் வராண்டாவுக்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த நூல் நூற்கும் ராட்டையை டிரம்புக்கும் மெலனியாவுக்கும் காட்டிய மோடி, ராட்டையின் முக்கியத்துவம் குறித்தும் அதில் நூல் நூற்கும் முறை பற்றியும் கூறினார்.

அதை மிகவும் ஆர்வத்துடன் கேட்ட அவர்கள் இருவரும், ராட்டையின் அருகே அமர்ந்து அதில் நூல் நூற்க முயற்சி செய்தனர். அப்போது ஒரு பெண் அருகில் வந்து, பஞ்சில் இருந்து நூல் நூற்பது எப்படி என்பதை அவர்களுக்கு செய்து காண்பித்தார்.

பின்னர் வராண்டாவில் இருந்து கீழே இறங்கி வந்த டிரம்ப், அங்கு வைக்கப்பட்டு இருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது கருத்தை பதிவு செய்தார். இந்த அற்புதமான வருகைக்கு ஏற்பாடு செய்ததற்காக எனது மிகப்பெரிய நண்பரான மோடிக்கு நன்றி என்று அதில் எழுதி அவர் கையெழுத்திட்டார். மெலனியாவும் அதில் கையெழுத்திட்டார்.

பின்னர் ஒரு மேஜையில் வைக்கப்பட்டு இருந்த பளிங்கு கல்லால் செய்யப்பட்ட 3 குரங்குகளின் பொம்மைகளை டிரம்பிடம் மோடி காட்டினார். தீயவற்றை பார்க்காதே, தீயவற்றை பேசாதே, தீயவற்றை கேட்காதே என்ற காந்தியின் கொள்கைகளை விளக்கும் அந்த பொம்மைகள் குறித்து டிரம்பிடம் அவர் விளக்கி கூறினார். அந்த பொம்மைகளை அவர் டிரம்புக்கு பரிசாக வழங்கினார்.

இதேபோல் காந்தியின் சுயசரிதை புத்தகம், ராட்டை, காந்தியின் போதனைகள் அடங்கிய புத்தகம் ஆகியவையும் வழங்கப்பட்டது.

சபர்மதி ஆசிரமத்தில் 15 நிமிடம் இருந்த டிரம்ப், பின்னர் அங்கிருந்து, ஆமதாபாத்தின் மோட்டேரா பகுதியில் உள்ள விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றார். பிரமாண்டமான இந்த மைதானம்தான் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கருதப்படுகிறது.

சபர்மதி ஆசிரமத்தில் இருந்து கிரிக்கெட் மைதானம் செல்லும் வழி நெடுகிலும் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்த மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் கலந்து கொண்டு பேசினார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட அந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வாழ்க்கையில் மறக்க முடியாதது என்று கூறினார்.

அத்துடன், இந்தியா-அமெரிக்கா இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) ரூ.21 ஆயிரத்து 600 கோடிக்கு ராணுவ ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாகவும் கூறினார்.

நிகழ்ச்சியில் மோடியும் பேசினார்.

நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, ஆமதாபாத்தில் இருந்து விமானத்தில் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிட்ட டிரம்ப், பின்னர் அங்கிருந்து மாலை டெல்லி சென்றார்.

டெல்லி விமானநிலையத்தில் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி மற்றும் உயர் அதிகாரிகள் டிரம்பை வரவேற்றனர். விமானநிலைய வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் டிரம்ப் ஐ.டி.சி. மவுரியா ஓட்டலுக்கு சென்று தங்கினார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் காந்தி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தும் டிரம்ப், அதன்பிறகு ஐதராபாத் இல்லத்துக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

டிரம்பின் வருகையையொட்டி ஆமதாபாத் நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் தேசிய பாதுகாப்பு படை, சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமெரிக்க ரகசிய பாதுகாப்பு படை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

இதேபோல் தாஜ்மகாலிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

டெல்லியிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

டிரம்ப் வருகை துளிகள்

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகையையொட்டி தாஜ்மகாலில் உள்ள முகலாய மன்னர் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் கல்லறைகளையும், அதன் மேல் உள்ள சரவிளக்குகளையும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையினர் புதுப்பித்தனர்.

* தாஜ்மகால் வளாகத்தை டிரம்ப் குடும்பத்தினரும், அவர்களுடன் வந்த அதிகாரிகளும் சுற்றிப்பார்க்க வசதியாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத கோல்ப் கார்கள் 20 தயாராக வைக்கப்பட்டு இருந்தன.

* நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை பார்க்க ஆமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு இருந்தனர். அவர்களில் பலர் மோடி மற்றும் டிரம்ப் உருவ முகமூடி அணிந்து இருந்தனர்.

* நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரையாற்றும்போது, சில இந்தி வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டார். குறிப்பாக வேதாஸ், ஷோலே, சாய்வாலா போன்ற வார்த்தைகளையும், சுவாமி விவேகானந்தா, சச்சின் தெண்டுல்கர் போன்ற பெயர்களையும் கூறுவதற்கு அவர் சிரமப்பட்டார்.

* டெல்லி ஜந்தர்மந்தரில் இந்து சேனா அமைப்பு மோடிக்கும், டிரம்புக்கும் கடவுள் ஆசி கிடைக்கவும், அவர்களது பேச்சுவார்த்தை மூலம் பயங்கரவாதம் ஒழிய வேண்டும் என்பதற்காகவும் ஒரு யாகத்தை நடத்தியது.

* டிரம்ப் தங்கும் ஓட்டல் ஐ.டி.சி. மவுரியாவை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்புடன், இரவிலும் படம் பிடிக்கக்கூடிய, உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்கள் நூற்றுக்கணக்கில் பொருத்தப்பட்டு இருந்தன.

* டிரம்ப் பயண பாதையிலும், தங்கும் ஓட்டலை சுற்றிலும் தேசிய பாதுகாப்பு படையின் ஆளில்லா குட்டி விமானம் எதிர்ப்பு கருவிகள், கலவர தடுப்பு வாகனங்கள், துப்பாக்கி ஏந்திய வீரர்கள், மோப்ப நாய்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

* டிரம்ப் தங்கியிருந்த மவுரியா ஓட்டல் மட்டுமின்றி, அருகில் உள்ள தாஜ் பேலஸ் ஓட்டலையும் பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்தனர்.

* போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பயன்படுத்தப்படும் நவீன கான்கிரீட் மற்றும் பிளாஸ்டிக் தடுப்புகள் டிரம்ப் பயண பாதையில் பயன்படுத்தப்பட்டன. அந்த பாதையில் இருந்த மரங் களின் கிளைகளும் வெட்டப்பட்டன.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com