மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்; காலை 9:50 மணி நிலவரப்படி 15.85% வாக்குகள் பதிவு

மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் காலை 9:50 மணி நிலவரப்படி 15.85% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்; காலை 9:50 மணி நிலவரப்படி 15.85% வாக்குகள் பதிவு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்று 4வது கட்ட தேர்தல் நடக்கிறது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா, காங்கிரஸ்-இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம், 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் வெற்றி பெறும் வேட்பாளர்களை, ஒரு கோடியே, 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 22 வாக்காளர்கள் நிர்ணயிக்க உள்ளனர். ஹவுரா, தெற்கு 24 பர்கானாஸ், ஹூக்ளி, அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

இதில், கூச் பெஹார் பரபரப்பான மாவட்டமாக கருதப்படுகிறது. மொத்தமுள்ள, 15 ஆயிரத்து 940 ஓட்டுச்சாவடிகளுக்கு, 789 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்றைய தேர்தலில், பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரி பபுல் சுப்ரியோ, டோலிகஞ்ச் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அருப் பிஸ்வாசை எதிர்த்து களம் காண்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் பொது செயலரும், மாநில மந்திரியுமான பார்த்தா சாட்டர்ஜி, பா.ஜ.க.வை சேர்ந்த நடிகை ஷ்ரபந்தி சாட்டர்ஜியை எதிர்த்து போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து சமீபத்தில் விலகி பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் மந்திரி ரஜிப் பானர்ஜி, ஹவுராவின் டோம்ஜுர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. ஓட்டுப்பதிவை முன்னிட்டு வாக்காளர்கள் காலையிலேயே தங்களுடைய அடையாள அட்டைகளுடன் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் அவர்களுக்கான தனித்தனி வரிசையில் நின்றனர்.

அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்பின்னர் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் காலை 9:50 மணி நிலவரப்படி 15.85% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தோராய அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. சில வாக்கு சாவடிகளில் இருந்து தரவுகள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com