மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்; தொடரும் அரசியல் வன்முறைகள்

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்; தொடரும் அரசியல் வன்முறைகள்
Published on

கொல்கத்தா,

294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27ந்தேதி தொடங்கி இந்த மாதம் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதுவரை, மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் 6 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 4வது கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரசார் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் துர்காபூரில் பசுதா பகுதியில் பா.ஜ.க. அலுவலகம் மீது திரிணாமுல் காங்கிரசார் நேற்று தாக்குதல் நடத்தி அங்கிருந்த நாற்காலிகளை அடித்து, உடைத்துள்ளனர் என பா.ஜ.க. தரப்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மதபங்கா தொகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிரிந்தர நாத் பர்மான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு விட்டு திரும்பியபொழுது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

பா.ஜ.க. குண்டர்கள் கிரிந்தராவின் காரை அடித்து நொறுக்கி, அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் தெற்கு ஹவுரா தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. வேட்பாளர் ரந்திதேவ் சென்குப்தாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தனது வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கேலா ஹோப் என்ற கோஷங்களை எழுப்பினர். அந்த கட்சி தோல்வியை ஏற்று கொண்டு விட்டது. அதனால் அவர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.

மேற்கு வங்காள தேர்தலில் 8 கட்டங்களாக நடைபெறும் வாக்கு பதிவு நிறைவடைவதற்குள் பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரசார் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதும், ஒருவர் மீது மற்றொருவர் குற்றச்சாட்டு சுமத்துவதும் வாடிக்கையாகி விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com