

புதுடெல்லி,
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:-
நீட் விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், நீட் தேர்வு தொடர்பான மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? அவர்களுக்கு நீதி கிடைக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
நீட் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். குறிப்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஒரு கூட்டம் நடைபெறும் என மட்டுமே மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும், என்ன முடிவுகள் அல்லது வாக்குறுதிகள் வழங்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை உறுதியாக எதையும் கூற முடியாது
இவ்வாறு அவர் கூறினார்.