அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

போக்குவரத்துத் துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
Published on

புதுடெல்லி,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அதாவது 2024 செப்டம்பர் 29ஆம் தேதியே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்தநிலையில், அமைச்சராக அவர் பொறுப்பேற்றதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி ஜாமீனை பெற்ற அவர், மறுநாளே மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற வருவதால், விசாரணை பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். எனவே, அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுதாரர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி, அபய்.எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு வந்த போது, 'செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதற்கு முன்பாக வழக்கு தொடர்பாக வந்த தடயவியல் நிபுணர் தற்போது வரவில்லை. தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் தான் பயத்தில் வர மறுக்கிறார். எனவே செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம்,' என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராக தொடர்ந்தால் என்னவாகும்? செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை கேட்டு சொல்லுங்கள். அமைச்சராக தொடர்வதா, இல்லையா என்பதை செந்தில் பாலாஜிதான் முடிவு செய்ய வேண்டும். அப்படி அமைச்சராக தொடர விரும்பினால், முன்னுரிமை கொடுத்து விசாரிக்கலாம். கடந்த முறையே நாங்கள் அதிருப்தி தெரிவித்திருந்தோம் என தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com