

புதுடெல்லி,
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக பீகாரிலும், 2-ம் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் இப்பணி நடந்தது.
முன்னதாக முதல்கட்டமாக பீகாரில் கடந்த ஆண்டு சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக தமிழகம், மேற்கு வங்காளம், கேரளம், குஜராத், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உத்தரபிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும் அந்தமான் நிகோபார், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
மேற்கூறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர்கள் எண்ணிக்கை 50.99 கோடியாக இருந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு பின்பாக 45.81 கோடியாக குறைந்தது. 5.18 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக ஆந்திர மாநிலம், அருணாசல பிரதேசம், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகம், மராட்டியம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலுங்கானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 16 மாநிலங்கள் சண்டீகர், டெல்லி, தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டையூ மற்றும் டாமன் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) வரும் 30ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச பகுதிகளில் தட்பவெப்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடவடிக்கை பின்னர் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தப்பணிக்காக 3.94 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 36.73 கோடி வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வர்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.