தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யார்? வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. தேர்வு தொடர்பாக டெல்லியில் நேற்று ஆலோசனை நடைபெற்றது.
புதுடெல்லி,
தமிழகத்தில் டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். பொதுவாக ஒரு டி.ஜி.பி. ஓய்வு பெறுவதை முன்னிட்டு, முன்கூட்டியே அதாவது 3 மாதங்களுக்கு முன்பே அடுத்த டி.ஜி.பி.யின் தேர்வு நடைமுறைகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறை அப்படி நடைபெறவில்லை. இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் புதிய டி.ஜி.பி. தேர்வு தொடர்பாக, பொறுப்பு டி.ஜி.பி. நியமனத்துக்கு பிறகு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்ய 8 பேர் கொண்ட ஒரு பட்டியலை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த பட்டியலில் பணிமூப்பு அடிப்படையில் ராஜீவ்குமார், சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோர், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
இந்த 8 பேர் பட்டியலில் இருந்து 3 பேரை இறுதி செய்வதற்கான பணியமர்த்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. குடிமைப்பணிகள் தேர்வாணைய அலுவலகத்தில் தேர்வாணைய தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மற்றும் மத்திய அரசின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய அரசின் அதிகாரிகளில் துணை ராணுவப்படைகளின் டி.ஜி.பி.க்களும் பங்கேற்று இருந்தனர்.
இந்த கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்கியது. தமிழக அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 8 பேரின் தகுதிகள், பணிக்கால நடவடிக்கைகள், ஒழுக்க நெறிமுறைகள் போன்றவற்றை ஆய்வு செய்து அதில் 3 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், கூடுதல் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் இரவில் தகவல் வெளியானது. அடுத்த கூட்டத்தில் 3 பேர் பட்டியல் முடிவு செய்யப்படும்.






