

ராய்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் ராய்பூரில் கடந்த ஞாயிறு அன்று பா.ஜனதா தலைவர்களின் கூட்டத்தை உள்ளூர் செய்தியாளர் சுமன் பாண்டே வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவரை பா.ஜனதா தலைவர் ராஜீவ் அகர்வால் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. செய்தியாளர் சுமன் பாண்டேவை தாக்கிய விவகாரத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் ராஜீவ் அகர்வால் மற்றும் 3 பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்கள் பா.ஜனதா தலைவர்களை பேட்டியெடுக்கும்போது கடந்த புதன்கிழமை ஹெல்மெட் அணிந்து கொண்டனர்.
பா.ஜனதா தலைவர்களை பேட்டிக்கண்ட செய்தியாளர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து கொண்டிருக்கும் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சுமன் பாண்டே பேசுகையில், என்னுடைய மொபைல் போனில் கூட்டத்தை நான் வீடியோ எடுத்தேன், அப்போது பா.ஜனதா தலைவர்களுக்கு உள்ளேயே சில விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அகர்வால் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வீடியோவை டெலிட் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். என்னை தாக்கினர், வலுக்கட்டாயமாக வீடியோவை டெலிட் செய்தனர், என கூறினார்.
இச்சம்பவம் நடைபெற்ற பின்னர் 20 நிமிடங்கள் வலுக்கட்டாயமாக கூட்டம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டேன். பின்னர் நான் வெளியே வந்ததும் பிற செய்தியாளர்களிடம் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்கள் தரப்பில் பா.ஜனதா அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்பட்டது. பா.ஜனதா தரப்பில் பாண்டேவிடம் மன்னிப்பு கோரப்பட்டது. சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்தது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக கூட்டம் நடத்தப்பட்டது, பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.