

புதுடெல்லி,
தேவஸ்தானம் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்து பரிந்துரைக்காததால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீப தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை என்று மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா சுப்ரீம் கோர்ட்டில் 17 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழுவானது வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கார்த்திகை திருநாள் அன்றும் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் கோவிலின் மரபுகளுக்கு உட்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கடந்த 20-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகளுடனும், 21-ம் தேதி இந்து சமய அறநிலைய துறை ஆணையருடனும், காவல் ஆணையருடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தாசில்தார் மற்றும் பிற அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு குறித்து ஒவ்வொரு பத்தியாக வாரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 நபர்களுக்கு மிகாமல் தீபம் ஏற்றும் நிகழ்வை நடத்த முடிவு செய்யப்பட்டது. தீபத்தை பொறுத்தவரை கோயில் வழக்கப்படி செயல் அலுவலரால் விளக்கு ஏற்றும் முறை தீர்மானிக்கப்படும். சி.ஆர்.பி.எப் படையினரின் பாதுகாப்பு தேவையில்லை என்றும் தமிழக காவல்துறை படைகளை நிலை நிறுத்தும் திட்டம் தயாராக உள்ளது என்றும் காவல் ஆணையர் தெரிவித்தார்.
24 ஆம் தேதி தீபம் ஏற்றும் பணியானது தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் கொண்ட குழுவினரால் மட்டுமே பிரத்தியேகமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதற்கான நடவடிக்கையை எடுக்க தேவஸ்தான செயற்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவும் அதற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் அணி திரளுவது குறித்தும், போராட்டங்கள் நடத்துவது குறித்தும் நம்பகத்தகுந்த தகவல் கிடைக்கப்பெற்றது.
அசம்பாவிதங்களை தடுப்பதற்காகவும் போராட்டங்கள் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், திருப்பரங்குன்றம் மலையில் ஏறுவதற்கும் எந்த ஒரு நபருக்கும் தடைவிதிக்கும் வகையில் மதுரை மாவட்டத்தில் பி.என்.எஸ்.எஸ். பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவானது 25-ம் தேதி (இன்று) காலை 10 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து 24-ம் தேதி காலை முதல் நண்பகல் 12.30 மணி வரை நேரடியாக திருப்பரங்குன்றம் சென்று அந்த இடத்தில் செய்யப்பட்டு இருக்கக்கூடிய ஏற்பாடுகளை ஆய்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறை ஆணையருடன் கலந்துரையாடப்பட்டது. இதனை அடுத்து தீபம் ஏற்றும் நிகழ்வு நேரமான மாலை 6 முதல் 6.30 மணி வரைக்குள்ளாக தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரையிலான காலகட்டத்தில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபமேற்ற வரவில்லை. தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு உரிய நபர்களுக்கு அதிகாரம் அளித்து கோயில் தேவஸ்தானம் எந்த ஒரு கட்டத்திலும் மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கவில்லை. தேவஸ்தானத்திற்கு விளக்கேற்றும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு அமைத்து அதன் நபர்களின் பெயர்களை தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக இந்து சமய அற நிலையத் துறை செயலாளருக்கும் மின்னஞ்சல் நினைவூட்டல் உள்ளிட்டவை மாவட்ட கலெக்டர் என்ற முறையில் செய்திருந்தேன். ஆனால் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான அதிகாரம் கொண்ட குழு பரிந்துரைக்கப்படாததால், அதற்குப் பதிலாக அறங்காவலர் குழுவானது வழக்கமான இடத்தில் தீபம் ஏற்ற தீர்மானித்தது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கார்த்திகை திருநாள் அன்றும் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் கோயிலின் மரபுகளுக்கு உட்பட்டு திரு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. தேவஸ்தானம் தீப தூணில் தீபம் ஏற்றுவதற்கான குழுவை அமைத்து பரிந்துரைக்காததால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீப தூணில் தீபம் ஏற்றவில்லை. கோயில் அறங்காவலர் குழு வழக்கமான இடத்தில் விளக்கு ஏற்ற முடிவு எடுத்தது, ஆனால் தீப தூணில் தீபம் ஏற்றப்படாததற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்.
தேவஸ்தானத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும், தீபத்தூணில் விளக்கு ஏற்றுவதற்கும் மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுத்தது. குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டர் என்ற முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் தனது அதிகாரத்திற்கு உட்பட்டு எடுத்தேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.