இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஏன் அனுமதிக்கப்பட்டது? - சரத் பவார் கேள்வி


இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஏன் அனுமதிக்கப்பட்டது? - சரத் பவார் கேள்வி
x

நமது உள்நாட்டுப் பிரச்சினை குறித்து அமெரிக்கா பகிரங்கமாக பேசுவது இதுவே முதல் முறை என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 10-ந்தேதி அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.

இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி(எஸ்.பி.) தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான சரத் பவார், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"நமது உள்நாட்டுப் பிரச்சினை குறித்து அமெரிக்கா பகிரங்கமாக பேசுவது இதுவே முதல் முறை. இது நல்லதல்ல. சிம்லா ஒப்பந்தம் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இடையேயான ஒரு பிரத்யேக ஒப்பந்தமாகும். இதன்படி இரு அண்டை நாடுகள் தொடர்பான பிரச்சினைகளில் மூன்றாம் தரப்பின் தலையீடு இருக்காது.

இந்த நிலையில், மூன்றாவது நாடு இதில் தலையிடுவதற்கு நாம் எவ்வாறு அனுமதிக்க முடியும்? இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு ஏன் அனுமதிக்கப்பட்டது? இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.

ராணுவ மோதல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அனைத்து தகவல்களையும் ஊடகங்களில் வெளியிட முடியாது, சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவது சிறந்தது என்பதே என் கருத்து."

இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.

1 More update

Next Story