தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுமா? கர்நாடக முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
டி.கே.சிவக்குமார்
Published on

காவிரியில் தமிழகத்திற்கு தண்னீர் திறக்கப்படுமா? என்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் கர்நாடக மத்திய மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இந்த முறை ஜூலை மாதம் மிகக் குறைவாக 0.6 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு சென்றுள்ளது. இதுவரை தமிழகத்துக்கு சென்ற நீர் நாம் திறந்துவிட்டது அல்ல. மழைநீர் அங்கு சென்றுள்ளது” என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

காவிரி விவகாரம்

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் மந்திரிகள், அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி, தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ், கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ் குப்தா, மாநில போலீஸ் டி.ஜி.பி. எம்.ஏ. சலீம், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு குறித்தும், நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து டி.கே. சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உத்தரவுகள் வந்தன

தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்கும்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு இத்தகைய வறட்சி காலங்களில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கடந்த 2016, 2017, 2018, 2023-ம் ஆண்டுகளில் காவிரி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவுகள் வந்தன. கடந்த 3 ஆண்டுகள் நல்ல மழை பெய்ததால் அணைகள் நிரம்பி தமிழகத்துக்கு தேவையை விட அதிகமான நீர் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு (2025) தமிழகத்துக்கு 400 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் வழங்கப்பட்டது. இதில் பெரும் பகுதி நீர் கடலில் கலந்தது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முடிவின்படி தமிழகத்துக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க இயலாது என்று கூறி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தோம்.

திறக்க வேண்டும்

நீர் திறக்கும் அளவை குறைத்து உத்தரவை அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு நாங்கள் முறையிட்டோம். ஆனால் தமிழக அதிகாரிகள், நீர் வரத்து அதிகமாக உள்ளதால் அதிக நீர் திறக்கும்படி வாதிட்டனர். ஆனால் அந்த ஆணையம் நீர்வரத்து உள்ளதால் நீங்கள் ஒழுங்காற்றுக் குழு கூறியபடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஹாரங்கி அணையில் 95 சதவீதம், கபினியில் 83 சதவீதம், கே.ஆர்.எஸ்.-சில் 36 சதவீதம், ஹேமாவதியில் 67 சதவீத நீர் இருப்பு உள்ளது. இந்த தகவல்களை யாராலும் மூடிமறைக்க முடியாது. 15 நாட்களுக்கு தினமும் 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் 4½ டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது. தற்போது அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது சற்று திருப்தி அளிப்பதாக உள்ளது.

கர்நாடகத்தின் நலன்

தற்போது காவிரி அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதில் 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த தகவல்கள் அந்த ஆணைய உத்தரவிலும் இடம் பெற்றுள்ளது. தொடக்கம் முதலே இந்த விஷயத்தில் கர்நாடகத்தின் நலனைக் காக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்துள்ளோம். இப்போதும் மாநிலத்தின் நலனைக் காக்க நாங்கள் தயாராக உள்ளோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் நமது அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு அதை மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, சோமண்ணா, ஷோபாவுக்கு அனுப்பினோம். சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிக்கு அழுத்தம் கொடுத்தனர்.

மழைநீர் சென்றது

தமிழகம் 9.94 டி.எம்.சி. நீர் திறக்க வேண்டும் என்று கோரியது. அதில் 50 சதவீத நீரை திறக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை 2-ந் தேதி (நாளை) கூட்டியுள்ளோம். இதில் அனைத்துக்கட்சி தலைவர்கள், சட்ட நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இதில் விரிவாக ஆலோசனை நடத்தி தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கர்நாடக மத்திய மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இந்த முறை ஜூலை மாதம் மிகக் குறைவாக 0.6 டி.எம்.சி. நீர் தமிழகத்துக்கு சென்றுள்ளது. இதுவரை தமிழகத்துக்கு சென்ற நீர் நாம் திறந்துவிட்டது அல்ல. மழைநீர் அங்கு சென்றுள்ளது.

எதிராக போராட்டம்

இவ்வளவு விஷயங்கள் நடைபெற்ற போதும் எங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். வருகிற 13-ந் தேதி முழு அடைப்பு நடத்துவதாக கன்னட அமைப்புகள் கூறியுள்ளன. நாங்களே உங்களுக்கு ஆதரவாக நிற்கும்போது எதற்காக இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்த வேண்டும். இது தேவை இல்லை. இந்த முழு அடைப்பால் எந்த தீர்வும் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com