இந்தியாவில் ஸ்டார்லிங் இணைய சேவை தொடங்குவதற்கான அனுமதி நிறுத்தி வைப்பா? பரபரப்பு தகவல்

இந்தியாவில் தனது வணிகச் சேவையைத் தொடங்குவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.
ஸ்டார்லிங்
photo credit ANI
Published on

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் என்பது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணையச் சேவையாகும். பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் இயங்கும் ஆயிரக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்கள் மூலம் நேரடியாக இணைய வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொபைல் டவர்கள் அல்லது கேபிள் இணைப்புகள் அமைக்க முடியாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், ஆழ்கடல் பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களுக்கும் அதிவேக இணையச் சேவையை கொண்டு செல்ல முடியும். மேலும், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் நிலத்தடி கேபிள்கள் சேதமடைந்தாலும், இந்த செயற்கைக்கோள் இணையச் சேவை தடையின்றி செயல்படும் திறன் கொண்டது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஸ்டார்லிங் இணைய சேவை வழங்கி வரும் நிலையில், இந்தியாவில் தனது வணிகச் சேவையைத் தொடங்குவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. தொடக்கநிலை ஒப்புதல் கிடைத்திருந்தாலும், இறுதி உரிமம் இன்னும் வழங்கப்படவில்லை.

பாதுகாப்பு கவலைகளால் தாமதமா?

இந்நிலையில், ஈரானைச் சுற்றியுள்ள போர் சூழலில் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தின. ஈரானில் அதிகாரப்பூர்வ அனுமதி பெறாத நிலையிலும், அரசின் தடையை மீறி இந்தச் சேவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் சேவையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கவலை தெரிவித்ததாகவும், அதனால் இந்தியாவில் அனுமதி வழங்கும் நடைமுறையில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஸ்டார்லிங்க் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குற்றச்சாட்டுகளை மறுத்த ஸ்டார்லிங்க்

இதுகுறித்து நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் பிரிவு துணைத் தலைவர் லாரன் டிரேயர் வெளியிட்ட பதிவில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை என்றும், இந்திய அரசுடன் நிறுவனம் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விதிமுறைகளுக்கு ஏற்ப, இந்தியாவுக்கென தனித்துவமான செயல்பாட்டு முறையை உருவாக்கி வருவதாகவும், அனைத்து சட்ட மற்றும் ஒழுங்குமுறை விதிகளையும் வெளிப்படையாக பின்பற்றி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com