ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை

மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது இந்த ஆலோசனைக்கு பிறகு தெரியவரும்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்-மந்திரிகளுடன் மோடி இன்று ஆலோசனை
Published on

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது பிரதமர் மோடி இதை அறிவித்தார்.

ஊரடங்கு நடவடிக்கையை தொடங்கும் முன் மார்ச் 20-ந் தேதி மாநில முதல்-மந்திரிகளுடன் அவர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு கடந்த 2-ந் தேதியும் அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவே கவுடா உள்ளிட்ட தலைவர்களுடனும் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 18 நாட்கள் ஆகிவிட்டன, என்றாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இது தொடர்பாக கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய போது, அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்களிடம், நாட்டில் சமூக நெருக்கடி நிலை போன்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதால் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் மோடி கூறினார்.

ஏற்கனவே பெரும்பாலான மாநில முதல்-மந்திரிகளும், நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளனர்.

மத்திய அரசின் அறிவிப்பை எதிர்பார்க்காமல், ஒடிசா முதல்- மந்திரி நவீன் பட்நாயக் தங்கள் மாநிலத்தில் ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) காணொலி காட்சி மூலம் மாநில முதல்-மந்திரிகளுடன் மீண்டும் பேசுகிறார். அப்போது, நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது பற்றியும், ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்-மந்திரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

எனவே இந்த கூட்டத்துக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும்? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற 14-ந் தேதி முதல் ஒட்டுமொத்தமாக ஊரடங்கை நீக்கிவிட முடியாது என்று மோடி ஏற்கனவே கூறி இருப்பதால், ஒரு சில பகுதிகளில் அல்லது குறிப்பிட்ட சில மணி நேரம் ஊரடங்கு நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com