சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் பிரியங்கா சந்திப்பு

உத்தரபிரதேச மாநில விருந்தினர் மாளிகையில் விடிய, விடிய இருளில் தங்கிய பிரியங்கா, சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார். “மீண்டும் திரும்ப வருவேன்” என கூறி அவர் புறப்பட்டு சென்றார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் பிரியங்கா சந்திப்பு
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம், சோன்பத்ரா கிராமத்தில் ஏற்பட்ட நிலப்பிரச்சினையில், பழங்குடி விவசாயிகள் 10 பேர் கடந்த 17-ந் தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று முன்தினம் உத்தரபிரதேசம் வந்தார். ஆனால் அவர் சோன்பத்ரா செல்லும் வழியில், தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார். அவர் சிறிது நேரம் நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் சுனார் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். நேற்று 2-வது நாளாக போராட்டங்கள் நடந்தன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்காமல் திரும்ப மாட்டேன் என பிரியங்கா உறுதிபட கூறினார். இதன் காரணமாக அவர் இரவு விடிய, விடிய அந்த விருந்தினர் மாளிகையில் தங்கும் சூழல் உருவானது. அதிகாரிகள் அவரிடம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

அவரை வெளியேறச்செய்வதற்காக மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பை துண்டித்தாலும் நிலையில் மாற்றம் இல்லை. இருளிலும் அங்கிருந்து நகரவில்லை.

இதற்கிடையே சோன்பத்ரா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அங்கு வந்து சேர்ந்தனர். முதலில் அவர்கள் தடுக்கப்பட்டாலும், பின்னர் அவர்கள் பிரியங்காவை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர்கள் பிரியங்காவை சந்தித்தனர். அவர்கள் கூறியதை எல்லாம் அவர் அமைதியாக கேட்டார். துக்கம் தாளாமல் அழுதவர்களின் கண்ணீரைத் துடைத்ததுடன், அவர்கள் தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்தார்.

அதன்பின்னர் பிரியங்கா நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதில் இருந்து என்னை தடுத்த அதிகாரிகள், இப்போது நான் கைது செய்யப்படவில்லை, நான் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்கிறார்கள். நான் அந்த குடும்பங்களை சந்தித்து விட்டேன். இப்போது நான் போகிறேன். ஆனால் மீண்டும் வருவேன் என கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று கூறிய அவர், காங்கிரஸ் கட்சி தலா ரூ.10 லட்சம் வழங்கும் என குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் பிரியங்கா வாரணாசி புறப்பட்டு சென்றார்.

பிரியங்கா விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில பாரதீய ஜனதா அரசு சர்வாதிகார போக்கில் செயல்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், சுனார் விருந்தினர் மாளிகையில் பிரியங்காவை சிறை வைத்தது ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி என சாடி உள்ளார்.

இதேபோன்று பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், சோன்பத்ரா கிராம மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நீ நின்றதை நான் மிகவும் மதிக்கிறேன் பிரியங்கா என்று கூறி உள்ளார்.

பிரியங்காவின் செயல்களை நாடகம் என பாரதீய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் உத்தரபிரதேச மாநில தலைவர் சுவதந்திரதேவ் சிங் கூறுகையில், சோன்பத்ரா பிரச்சினையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தர்ணாவின் மூலம் பிரியங்கா ஒரு நாடகத்தை நடத்தி உள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்த பின்னரும் அவர் நாடகத்தை தொடர்கிறார். மக்களின் துயரத்தின் மீது அவர் அரசியல் நடத்துவதையே இது காட்டுகிறது என குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com