பொய் வழக்கு போட்டு பெண்ணுக்கு 72 நாட்கள் சிறை - கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம்

எந்த குற்றமும் செய்யாமல் ஒரு பெண் சிறையில் அடைக்கப்பட்டதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பொய் வழக்கு போட்டு பெண்ணுக்கு 72 நாட்கள் சிறை - கேரள ஐகோர்ட்டு கடும் கண்டனம்
Published on

திருவனந்தபுரம்,

திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் அழகு நிலையம் நடத்தி வந்தவர் ஷீலா சன்னி (45). கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி போதை ஸ்டாம்ப்புகள் வைத்து இருப்பதாக கூறி அவரை கேரள கலால் துறையினர் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து அவர் 72 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஸ்டாம்ப் போதை பொருள் அல்ல என்பது கலால்துறை ஆய்வக சோதனையில் தெரிய வந்தது. அதன் பின்னர் வழக்கில் இருந்து ஷீலா சன்னி விடுவிக்கப்பட்டார். ஷீலா சன்னி மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த கலால் துறை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் தனக்கு எதிராக பொய் வழக்கு போட்டு 72 நாள் சிறையில் வைத்ததற்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கோரியும், தன்னை பொய்யான வழக்கில் சிக்க வைத்து விட்டதாக கூறி ஷீலா சன்னி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட்டு தனி அமர்வு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் 72 நாட்களாக ஒரு பெண் எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

நீதி நியாய அமைப்பு இங்கு படு தோல்வி அடைந்துள்ளது. பொய் வழக்கு போட்டு சிறையில் 72 நாட்கள் அடைக்கப்பட்டிருந்த ஒருவரின் மனநிலையை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.

இந்த விஷயத்தில் விசாரணை நடந்து வருவதாக மாநில அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இது குறித்து பதிலளிக்க கேரளா தலைமைச் செயலர் மற்றும் மாநில கலால் துறை ஆணையருக்கு உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீண்டும் பரிசீலிக்க ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com