மாம்பழம் பறிக்க சென்ற தொழிலாளி மின்வேலியில் சிக்கி பலி

சிவாஜி கம்பி என நினைத்து மின்வேலி பகுதியை கடக்க முயன்றபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் தாக்கி பலி
Published on

ஸ்ரீகாளஹஸ்தி,

ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள தொட்டம்பேடு மண்டலம், கத்திவாரி கண்டிகை கிரமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி (வயது 43). கூலித்தொழிலாளியான இவர் பசவண்ணகுன்டா பகுதியில் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் தனது மகன் சுரேந்திராவுடன், கத்திவாரி கண்டிகை அருகே பசவண்ணகுண்டாவில் உள்ள மாந்தோப்பில் மாம்பழம் பறிக்கச் சென்றிருந்தார்.

மின்வேலி

அங்கு காட்டுப்பன்றிகள் அட்டகாசம் இருந்ததால் அவை தோட்டத்திற்குள் நுழைவதைத் தடுப்பதற்காக மாந்தோப்பின் உரிமையாளர் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதைக் கவனிக்காத சிவாஜி, கம்பி என நினைத்து மின்வேலி பகுதியை கடக்க முயன்றபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மகன் சுரேந்திரா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

போலீசார் வழக்குப்பதிவு

தகவல் அறிந்த புச்சிநாயுடு கண்டிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிபிரசாத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உடனடியாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து சிவாஜியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com