வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்வது உடல்நலத்தை பாதிக்கும் - ஆய்வில் தகவல்

வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்வது உடல்நலத்தை பாதிக்கும் என புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்வது உடல்நலத்தை பாதிக்கும் - ஆய்வில் தகவல்
Published on

புதுடெல்லி,

வாரத்திற்கு 70 முதல் 90 மணி நேரம் வரை வேலை செய்வது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வேலையில் நீண்ட நேரத்தை செலவிடுவது மன நலனுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அல்லது அதற்கும் மேல் வேலை செய்பவர்கள், மிகுந்த அழுத்தமான மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை தொடர்பான நோய் மற்றும் பணிச்சுமை தொடர்பான உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூட்டு பகுப்பாய்வில் கண்டறியப்பட்ட ஆய்வு முடிவுகள் பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும் இந்த ஆய்வில், சிறந்த வாழ்க்கை முறை, பணியிட கலாசாரம் மற்றும் குடும்ப உறவுகள் ஆகியவை ஊழியர்கள் குறைவாக விடுப்பு எடுப்பதற்கு காரணமாக இருப்பதாகவும், மேலாளர்களுடன் மோசமான உறவுகள் மற்றும் வேலையில் நோக்கமின்மை ஆகியவை விடுப்பு எடுக்கும் நாட்களை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில், மனச்சோர்வு மற்றும் பதற்றம் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 12 பில்லியன் நாட்கள் இழக்கப்படுவதாகவும், இதன் மூலம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் நிதி இழப்பு ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில், இது ஒரு நாளைக்கு சுமார் ரூ.7,000 ஆகும்.

சமீபத்தில் எல்&டி நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான எஸ்.என்.சுப்பிரமணியன், ஊழியர்கள் வீட்டில் உட்காருவதை விட ஞாயிற்றுக்கிழமை உள்பட வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதே போல் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியதும், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, "வீட்டில் 8 மணி நேரத்திற்கு மேல் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்" என்று கூறியதும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com