

புதுடெல்லி
நடப்பு ஆண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 7.1 சதவீதம் ஆக இருக்கும் என உலக வங்கி கணிப்பு வெளியிட்டு உள்ளது.
உலக வங்கி கணிப்பு வெளியிட்டு உள்ள செய்தியில், 2026-27 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்ததற்கும் கூடுதலாக பொருளாதாரம் விரிவடைந்து 7.8 சதவீதம் என்ற அளவில் வலுவாக இருந்தது.
இதனால், நடப்பு ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி 6.6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என கடந்த ஏப்ரலில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட அளவையும் விட கூடுதலாக 7.1 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என உலக வங்கி கணிப்பு வெளியிட்டு உள்ளது.
இந்த வளர்ச்சிக்கு தனியார் நுகர்வே முக்கிய காரணியாக தொடர்ந்து இருக்கிறது என்றும் தெரிவித்து உள்ளது. பொதுமக்களின் முதலீடு, ஆதரவான நிதி மற்றும் கொள்கை நிலைகளும் கூடுதலான ஆதரவை வழங்குகிறது. வளர்ச்சிக்கு ஏற்றுமதியும் முக்கிய பங்காற்றுகிறது.
வினியோக தரப்பை எடுத்து கொண்டால், ஆலை நடவடிக்கைகளும் எதிர்பார்ப்பை விட கூடுதலாக உள்ளது. உள்கட்டமைப்பு, கட்டுமான சரக்குகள் மற்றும் மின் உற்பத்தியும் வலுவான வளர்ச்சியை கொண்டுள்ளன.
எனினும், பொய்த்து போன தென்மேற்கு பருவமழையானது, கிராமப்புறங்களில் தேவையான வேளாண் விளைச்சல்களை பாதித்து உள்ளது. சேவை துறையை எடுத்து கொண்டால், அது வளர்ச்சி அதிகரிப்பையே தொடர்ந்து பதிவு செய்துள்ளது என தெரிவித்து உள்ளது.