

புதுடெல்லி,
உலக நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கும் நிலையில், தென்னை நார் பொருட்கள் ரூ.6,614 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் சுமார் 23 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுத்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டில் 14 மாநிலங்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.
இதில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தென்னை நார் கொண்டு கால்மிதி, கயிறு உள்பட பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
இது குறித்து தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:-
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், குஜராத், அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் கயிறு பொருட்கள் உற்பத்தியாகின்றன. இந்த தொழில் கிராமப்புறங்களில், குறிப்பாக பெண்களுக்கு மிகப் பெரிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.
பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 16 முக் கிய துறைகளில் கயிறு பொருட்கள் பரவலாக உபயோகப்படுத்தப்படுகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களாக தென்னை நார் மற்றும் சணல் போன்ற இயற்கை சார்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கடந்த ஆண்டு தென்னை நார் பொருட்களின் ஏற்றுமதி ரூ.6,614 கோடியையும், உள்நாட்டு வணிகம் ரூ.16 ஆயிரம் கோடியையும் எட்டியுள்ளது. உலக நாடுகளில் தென்னை நார் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இந் தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, வியட்நாம் போன்ற நாடுகளும் தென்னை நார் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன. வருகிற 2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் தென்னை நார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ரூ.45 ஆயிரம் கோடியாகவும், உள்நாட்டு வணிகம் ரூ.55 ஆயிரம் கோடியாகவும் உயர வாய்ப்பு உள்ளது.
தற்போது தேங்காய் மட்டையில் 45 சதவீதம் மட்டுமே தென்னை நார் பொருட்களுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இத்தொழிலில் கூடுதல் கவ னம் செலுத்தினால், மேலும் பல வேலைவாய்ப்புகளை உரு வாக்க முடியும். அத்துடன் விவசாயிகளுக்கு தேங்காய் மட்டைக்கு உரிய விலை கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும் தென்னை நார் ஏற்றுமதியும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.