யோகா தின நிகழ்ச்சி; ஆந்திரா 2 உலக சாதனைகளை படைத்துள்ளது - சந்திரபாபு நாயுடு

Image Courtesy : PTI
ஒரே இடத்தில் அதிக அளவிலான மக்கள் யோகா செய்ததற்கான உலக சாதனை இன்று படைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
அமராவதி,
ஐ.நா சபையில் கடந்த 2014-ம் ஆண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறினார். அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என அப்போது அவர் பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன. இதனை தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.
இந்நிலையில் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில், உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் ஆர்.கே.கடற்கரையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
இதனிடையே, யோகா தினத்தை முன்னிட்டு புதிய உலக சாதனையை படைக்கும் முயற்சியில் ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்டது. இந்த நிலையில், யோகா தின நிகழ்ச்சியின் மூலம் ஆந்திரா இன்று 2 உலக சாதனைகளை படைத்துள்ளது என அந்த மாநிலத்தின் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் யோகா செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, "இன்று 3.03 லட்சம் பேர் ஒன்றாக கூடி யோகா பயிற்சி செய்தனர். ஒரே இடத்தில் அதிக அளவிலான மக்கள் யோகா செய்ததற்கான உலக சாதனையாக இது அமைந்துள்ளது" என்று தெரிவித்தார். இருப்பினும், யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் சரியான எண்ணிக்கையை கின்னஸ் உலக சாதனை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
முன்னதாக குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் 1.47 லட்சம் பேர் பங்கேற்றதே இதுவரையிலான அதிகபட்ச சாதனையாக இருந்து வருகிறது. அந்த சாதனையை இன்று முறியடித்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
இதே போல், "ஆந்திராவில் இன்று ஒரே இடத்தில் சுமார் 22,000 பழங்குடியின மாணவர்கள் 108 நிமிடங்களில் 108 சூரிய நமஸ்காரங்களைச் செய்து, மற்றொரு சாதனையை படைத்தனர்" என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் இன்று யோகா செய்ய மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 2 கோடி பேர் பதிவு செய்வார்கள் என்று மாநில அரசு எதிர்பார்த்ததாகவும், ஆனால் அந்த எண்ணிக்கை 2.45 கோடியாக அதிகரித்ததாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.






