உலகின் சிறந்த எதிர்காலத்திற்கும் அவசியமானது யோகா: பிரதமர் மோடி பேச்சு

மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய யோகா நிகழ்வு நடைபெற்ற இதுவே முதல் முறையாகும்.
உலகின் சிறந்த எதிர்காலத்திற்கும் அவசியமானது யோகா: பிரதமர் மோடி பேச்சு
Published on

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் புகழ்பெற்ற ரெட் ரோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஆரோக்கியமான முதுமையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், உலக மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் யோகா விளங்குகிறது என்று தெரிவித்தார்.

உலகுக்கு இந்தியா வழங்கிய சிறந்த கொடைகளில் ஒன்று, யோகா. இந்த வாழும் கலையை மேன்மைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் 12-வது ஆண்டாக உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல நாடுகளில் சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்தியாவிலும் வழக்கமான உற்சாகத்துடன் இந்த தினம் கொண்டாடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற கருப்பொருளில் நடத்தப்படும் யோகா தின கொண்டாட்டங்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.இதில் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவில் யோகா பயிற்சி நடைபெற்றது. நாடு தழுவிய அமர்வாக காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வில் முதலில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

ஒருநாள் நிகழ்வு அல்ல

இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: யோகா என்பது நமது வாழ்க்கை முறைக்கு மட்டுமல்ல, உலகின் சிறந்த எதிர்காலத்திற்கும் அவசியமானது யோகாவை ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே கொண்டாடாமல், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். "யோகாவை ஒரு நாள் நிகழ்வாக மட்டுமே பார்க்காமல், நமது வாழ்க்கையிலும், குடும்பத்திலும், அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு செல்ல வேண்டும். வயது அதிகரிக்கும் போது மனிதர்களின் திறன் குறையாமல் இருக்க யோகா உதவுகிறது.. மனித வாழ்க்கை தொடர்ந்து முன்னேறுவதற்கு யோகா வழிவகுக்கிறது. 20 வயதில் இருந்ததை விட 40 வயதில் அதிக நெகிழ்வுத்தன்மையுடனும், 30 வயதில் இருந்ததை விட 50 வயதில் அதிக ஆற்றலுடனும் இருக்க வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

அமைதியான வாழ்க்கை

உடலை நெகிழ்வாக வைத்திருக்கவும், ஆற்றலை உயர்வாக பராமரிக்கவும், மனஅழுத்தமற்ற அமைதியான வாழ்க்கையை வாழவும் யோகா உதவுகிறது. உடல் மற்றும் மனதின் சமநிலையான வளர்ச்சியை உறுதி செய்வதிலும் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com