டெல்லியில் கோவில் பிரசாதத்தை திருடியதாக குற்றம்சாட்டி இளைஞர் அடித்துக்கொலை

பிரசாதத்தை திருடியதாக குற்றம்சாட்டி இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கோவில் பிரசாதத்தை திருடியதாக குற்றம்சாட்டி இளைஞர் அடித்துக்கொலை
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள சுந்தர் நகரி பகுதியைச் சேர்ந்த அப்துல் வஜித் என்பவருக்கு முகமது இஸ்ரார்(26) என்ற மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். அப்துல் வஜித் பழக்கடை நடத்தி வரும் நிலையில், இஸ்ரார் கூலி வேலைக்குச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் இருந்து அதிகாலையில் வெளியே சென்ற இஸ்ரார், நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. பின்னர் ஒரு ஆட்டோவில் உடல் முழுவதும் காயங்களோடு சிலர் இஸ்ராரை அவரது வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

இதனிடையே இஸ்ராரை சிலர் மின்கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியுள்ளது. உடல் முழுவதும் காயங்களுடன் வலியால் துடித்த இஸ்ரார், சிறிது நேரத்தில் அவரது வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் வஜித் அளித்த புகாரின் அடிப்படையில், அதே பகுதியைச் சேர்ந்த கமால்(23), அவரது சகோதரர் மனோஜ்(19), யூனுஸ்(20), கிஷன்(19), பப்பு(24), லக்கி மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இஸ்ரார் கோவில் பிரசாதத்தை திருடியதாக குற்றம்சாட்டி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com