

புதுடெல்லி,
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், அதை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லியில் உள்ள மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி வீட்டின் முன் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ், பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்ந்தாலும் தெருவுக்கு வந்து போராட்டம் நடத்துவார் ஸ்மிருதி.
ஆனால் இன்றோ, எல்லாவிதத்திலும் பணவீக்கம் அதிகரித்துவரும் நிலையிலும் முற்றிலும் அமைதி காக்கிறார். அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பத்தான் இளைஞர் காங்கிரஸ் முயல்கிறது. நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் லிட்டர் ரூ.100-ஐயும், டீசல் லிட்டர் ரூ.90-ஐயும் கடந்துவிட்டது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் நாளுக்கு நாள் கூடி வருகிறது. இப்படி வெளிப்படையான கொள்ளையிலும் பா.ஜ.க. அரசு பிறர் மீது பழிபோட முயற்சிப்பதுதான் அவமானகரமானது.
குளிர்காலம் முடிந்ததும் எரிபொருள் விலை குறையும் என்று பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது அறிவற்றது, அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். நல்ல நாட்களுக்கு பிரதமர் மோடியும் அவரது மந்திரிகளும் உறுதி அளித்ததற்கு மாறாக, விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.