புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் உயிரிழப்பு: நடப்பாண்டில் இதுவரை 1,300 பேர் பாதிப்பு

மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
டெங்கு
Published on: 

புதுச்சேரி,

புதுவையில் டெங்கு பாதிப்பால் வாலிபர் பலியாகி உள்ளார். நடப்பு ஆண்டில் இதுவரை 1,300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாலிபர் உயிரிழப்பு

புதுச்சேரியில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் முகமது இர்பான் (வயது 22). கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுவையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு

புதுவையில் கடந்த நவம்பர் மாதம் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளன. புதுவையில் நடப்பு ஆண்டில் இதுவரை 1,300-க்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

எல் நினோ வானிலை மாற்றத்தால் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்த நிலையில் டெங்கு நோய் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளை கண்காணித்து உடனடியாக அவற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

சிறப்பு சிகிச்சை

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. இவை சுத்தமான தண்ணீரில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யக்கூடியது. எனவே பொதுமக்கள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள டயர், பானை, உரல், தேங்காய் மட்டை போன்ற பொருட்களில் தண்ணீர், மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்த பரிசோ தனை செய்து, உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பலருக்கு டெங்கு காய்ச்சல் வந்திருப்பதே தெரியவில்லை. எனவே இதற்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறலாம். இதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. புதுவையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவ டிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X