எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட இளைஞர்... அதிர்ச்சி வீடியோ வெளியீடு

ஹவுரா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இளைஞர் ஒருவர் சக பயணியால் வெளியே தள்ளி விடப்பட்ட வீடியோ அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட இளைஞர்... அதிர்ச்சி வீடியோ வெளியீடு
Published on

ஹவுரா,

ஹவுரா நகரில் இருந்து மால்டா நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பீர்பும் மாவட்டத்தில், தாராபீத் சாலை மற்றும் ராம்பூர்ஹாத் ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவில் சென்று கொண்டு இருந்துள்ளது.

இதில் பயணித்த சஜல் ஷேக் என்ற இளைஞர், சக பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

இதுபற்றி போலீசார் கூறும்போது, சக பயணிகளின் இருக்கையில் ஷேக் கால்களை வைத்தபடியும், பயணிகளை மிரட்டி விட்டு மொபைல் போனில் பேசியபடியும் இருந்துள்ளார். பெண்கள் உள்பட பிற பயணிகளை திட்டியும், மிரட்டியும் உள்ளார் என கூறியுள்ளனர்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி ஒருவர் எழுந்து சென்று, ஷேக்குடன் பேசுகிறார். அவர்களுக்குள் கைகலப்பு ஏற்படுகிறது. இதில், ஒரு கட்டத்தில் ஷேக்கை பிடித்து சக பயணி ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விடுகிறார். பின்பு எந்த வருத்தமும் இல்லாதது போன்று தனது இருக்கைக்கு அவர் திரும்புகிறார்.

ரெயில்வே போலீசார் ஒருவர், காயத்துடன் தண்டவாளத்தில் கிடந்த ஷேக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிகிச்சைக்கு பின் ஷேக் நலமுடன் உள்ளார்.

போலீசாரிடம் கூறிய ஷேக், சைந்தியா நகரில் ரெயிலில் ஏறினேன். வீட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். ரெயிலில் 3, 4 பேர் தகாத வார்த்தைகளை பேசியபடி இருந்தனர். பக்கத்தில் குடும்பத்துடன் வந்தவர்கள் இருந்தனர். இதுபோன்று நடந்து கொள்ளாதீர்கள் என கூற நான் சென்றது தவறு என ஷேக் கூறியுள்ளார்.

அவர்களில் ஒருவர் எழுந்து வந்து சட்டை காலரை பிடித்து, என்னை மிரட்டினார். அவரை பயமுறுத்த கத்தி ஒன்றை எடுக்க முயன்றபோது, அடுத்த கணத்தில் தண்டவாளத்தில் கிடந்தேன். எப்படி அது நடந்தது என்பது கூட எனக்கு தெரியவில்லை. நினைவு திரும்பியபோது, தண்டவாளத்தில் கிடந்தது எனக்கு தெரிய வந்தது. கை, கால்கள் எல்லாம் வலியாக இருந்தது என ஷேக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com