இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது; தி.மு.க, ஆம் ஆத்மி புறக்கணிப்பு

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்றுள்ளன.
ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்று வருகிறது.கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை சரிசெய்வது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஆலோசிப்பது என்ன?

சமீபத்திய தேர்தல்களில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வியை சந்தித்தது. தமிழ்நாட்டில் கூட்டணி மாறியதால், இந்தியா கூட்டணியில் பங்கேற்பதை திமுக தவிர்த்துள்ளது. ஆம் ஆத்மியும் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளன. மேலும், பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்வதற்கான புதிய அரசியல் உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் , கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்கள் கூட்டம் முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றார். மேலும் அவர் கூறுகையில், “இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றன.

தவெகவுக்கு அழைப்பு இல்லை

மத்திய அரசு ஜனநாயக விரோத போக்கை கடைப்பிடித்து வருவது, மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. இந்தியா கூட்டணியின் இந்தக் கூட்டம் மிகவும் முக்கியமானது” என்றார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தவெகவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சிக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com